மாமல்லபுரத்தை ரகசியமாக கண்காணிக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்
மாமல்லபுரத்தில் சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறுவதை ஒட்டி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனம் முழுவதும் மாமல்லபுரம் திரும்பியுள்ளது.;
மாமல்லபுரம்:
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு உணவுப் பாதுகாப்பு சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவுகளை மக்களுக்கு உணவுத் தொழில் நிறுவனங்கள் வழங்குகிறதா என்பதை கண்காணித்து மக்களின் ஆரோக்கியத்தை காத்து வருகிறது.
மாமல்லபுரத்தில் சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி வரும் ஜூலை 28-ல் துவங்குகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செஸ் வீரர்கள் மாமல்லபுரம் வருகின்றனர். இதனால் தற்போது இந்த அமைப்பின் புதுடெல்லி தலைவர் கே.சந்திரமௌலி உத்தரவின் பெயரில் அதிகாரிகளின் கவனம் முழுவதும் மாமல்லபுரம் திரும்பியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை மாமல்லபுரம் பகுதியினர் முறையாக பயன்படுத்தி வருகிறார்களா? என்பதை அதிகாரிகள் ரகசியமாக கண்காணிக்க துவங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மாமல்லபுரம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜசேகர் அறிவுறுத்தலின் படி ஹோட்டல், விடுதி, சிற்றுண்டி, சாலையோர உணவகம், ஜூஸ், ஐஸ்கிரீம், இறைச்சி, மீன், பாலகம், மளிகை போன்ற அனைத்து கடைகளும் உணவுத்தரம் குறித்த பாதுகாப்பு சான்றிதழ் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.