களை கட்டிய உணவு திருவிழா

களை கட்டிய உணவு திருவிழா

Update: 2022-08-07 16:27 GMT

திருப்பூர்

காங்கயத்தில் உணவுத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சமையல் போட்டியில் பங்கேற்று பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து பெண்கள் அசத்தினார்கள்.

உணவு பாதுகாப்பு பேரணி

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மக்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் உணவுத்திருவிழா காங்கயத்தில் நேற்று காலை நடந்தது. தொடக்க நிகழ்ச்சியாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தொடங்கி வைத்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை வரவேற்றார்.

பேரணியில் சுயஉதவிக்குழு பெண்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், வணிகர்கள், பொதுமக்கள் கலந்து ெகாண்டுடனர். பேரணி என்.எஸ்.என்.திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

உணவுத்திருவிழா

இதைத்தொடர்ந்து மண்டபத்தில் திருப்பூர் உணவுத்திருவிழாவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார். அங்கு சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள் என 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன. அந்த அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் சமையல் போட்டி நடைபெற்றது. ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென்னிந்திய சமையல், சிறுதானிய சமையல், பால்வகை சமையல், மறந்து போன உணவுகள், சமையல் அலங்காரம் ஆகிய 10 தலைப்புகளில் சமையல் போட்டி நடைபெற்றது. பெண்கள் தங்கள் வீடுகளில் சைவ, அசைவ உணவு வகைகளை சமையல் செய்து மண்டபத்தில் காட்சிப்படுத்தினார்கள்.

சமையல் போட்டி

பாரம்பரியமிக்க சிறுதானியங்களை கொண்டு இனிப்பு வகைகள், உணவு வகைகளை பெண்கள் விதவிதமாக அறுசுவையுடன் தயாரித்து வைத்திருந்தனர். உலக சாதனை சமையல் கலைஞரான செப் தாமு பங்கேற்று உணவு வகைகளை ருசித்து பார்த்து சிறந்த உணவு வகைகளை தேர்வு செய்தார்.

உணவுத்திருவிழாவில் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டம், பறையாட்டம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தது. சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அறுசுவை அரசி என்ற பட்டமும் வழங்கப்பட்டது. மாலையில் சுகிசிவத்தின் பட்டிமன்றம் நடைபெற்றது. திருப்பூர் உணவுத்திருவிழா நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

---------

(பாக்ஸ்)

அசத்தலான அரங்குகள்

திருப்பூர் உணவுத்திருவிழாவில் 'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த அரங்கை கலெக்டர் வினீத் பார்வையிட்டார். இயற்கை உணவு அங்காடி, பசுமை அங்காடிகள், பிரியாணி அரங்குகள், எண்ணெய், நெய் நிறுவனங்கள், பாரம்பரிய அரசிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. 40 வகையான மூலிகைகள் கொண்ட தழை ரசம் தயாரித்து வழங்கினார்கள்.

தமிழர் பாரம்பரிய கலைமன்றத்தின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில், தென்னை பதநீர், சிறுதானிய சத்துணவுகள், பாரம்பரிய உணவு வகைகளை விதவிதமாக தயாரித்து வைத்திருந்தனர். சமூக நலன் மற்றும் சத்துணவு துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனர்.

---

(பாக்ஸ்)

குடும்பம் குடும்பமாக வந்து ரசித்தனர்

உணவு திருவிழாவை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்த பார்த்து ரசித்தனர். உணவு திருவிழா நடக்கும் மண்டப வளாகத்தில் காங்கயம் காளைகள் நிறுத்தப்பட்டு இருந்தன. 114 வகையான பாரம்பரிய அரிசி வகைகளை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். அந்த பாரம்பரிய அரிசியை சமைத்தும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

----------

(பாக்ஸ்)

திருப்பூரின் அறுசுவை அரசி பட்டம்

சமையல் போட்டியில் முதலிடம் பிடித்து காங்கயத்தை சேர்ந்த புல்சந்த் பானு அறுசுவை அரசி பட்டத்தை வென்றார். அவருக்கு 2 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அணிக்கும், 3-வது பரிசு கேசவனுக்கும், 4-வது பரிசு கோவையை சேர்ந்த ஹேமாவுக்கும் வழங்கப்பட்டது. 2-வது பரிசாக 1 கிராம் தங்க நாணயம், 3-வது, 4-வது பரிசாக வெள்ளி விளக்கு பரிசளிக்கப்பட்டது. மேலும் 6 பேருக்கு பட்டுப்புடவைகள் பரிசளிக்கப்பட்டது.அதுபோல் விழிப்புணர்வு வாசகம், ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற தலா 3 பேருக்கு வெள்ளிக்கொலுசு, பணப்பரிசு வழங்கப்பட்டது.விழாவில் செப் கலைஞர்கள் 20 நிமிடங்களில் கோழி இறைச்சியை பயன்படுத்தி 101 வகையான உணவு வகைகளை தயாரித்து புதிய சாதனை படைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்