மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து பெண்களிடம் வழிப்பறி; நகைகளை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையர்கள்

மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்து பெண்களிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். திருடிய நகைகளை விற்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.

Update: 2023-08-05 07:34 GMT

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கண்ணாடி கடையில், கண்ணாடி வாங்குவதுபோல் நடித்த 2 'டிப் டாப்' ஆசாமிகள் அங்கு வேலை செய்த பாண்டிசெல்வி (வயது 23) என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுபற்றி மடிப்பாக்கம போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சிம்ஹா, சென்னை தெற்கு இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் பரங்கிமலை துணை கமிஷனர் தீபக் சிவாச், மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங் டி ரூபன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்தனர்.

சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், கொள்ளையர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து தேடினர். அப்போது வெளி மாநில செல்போன் சிக்னல் சம்பவ இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன் எண்ணை கண்காணித்த போது மும்பை, ஐதராபாத் மற்றும் கர்நாடகாவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றபோது அங்கிருந்து சென்னை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் மடிப்பாக்கம் கைவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், மும்பையை சேர்ந்த குலாப் அப்பாஸ் (40), சக்லன் மஷ்லூன் (22) என்பதும், பாண்டிச்செல்வியிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள் என்பதும் தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் இவர்கள், மாதந்தோறும் மும்பையில் இருந்து திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்து தனியாக நடந்து செல்லும் பெண்கள், கடைகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் பேச்சு கொடுத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி நூதன திருட்டில் ஈடுபட்டு விட்டு மும்பைக்கு சென்றுவிடுவார்கள். அந்த நகைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரிந்தது.

மேலும் இவர்கள், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், ராமாபுரம், திருப்பூர் உள்பட 9 இடங்களில் இதேபோல் கடைகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகை வாங்குவதுபோல் நடித்தும், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைகளை பாதுகாப்பாக அணிந்து செல்லும்படி அறிவுரை வழங்குவதுபோல் நடித்தும் நூதன முறையில் வழிப்பறி செய்ததும் தெரிந்தது.

மும்பையில் திருட்டு மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கவில்லை என்றால் அங்கிருந்து சென்னை மற்றும் கோவைக்கு விமானத்தில் பறந்து வந்து கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்