உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது/

Update: 2023-03-17 21:14 GMT

வெக்காளியம்மன் கோவில்

திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார். மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

பூச்சொரிதல் விழா

அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 6 மணிக்கு கோவில் சார்பில் அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்களை அம்மனுக்கு சாற்றினர். அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தாம்பூல தட்டிலும், கூடை, கூடையாகவும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றினர்.

திருச்சி மாநகரில் இருந்து மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விடிய, விடிய பக்தர்கள் அணி அணியாக வந்து பூக்களை காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்