பூ வியாபாரி வெட்டிக் கொலை
கயத்தாறு அருகே பூ வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை, மகன் உள்பட ஏழுபேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருேக பூ வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை-மகன் உள்பட 7 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பூ வியாபாரி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள செட்டிகுளம் பஞ்சாயத்து மஞ்சநம்பிகிணறு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் அழகுதுரை (வயது 30), பூ வியாபாரி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், அனுஷ்பிரியா, திவ்யதர்ஷினி, முகிஅரசன் ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.
அழகுதுரை நேற்று முன்தினம் செட்டிக்குறிச்சியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மதுக்குடிக்க சென்றார். அப்போது, அங்கு அவரது உறவினர் ஒருவர் அமர்ந்து இருந்தார். 2 பேரும் ேசர்ந்து மதுக்குடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
வெட்டிக் கொலை
இந்த நிலையில் இரவில் டாஸ்மாக் பார் உரிமையாளரான நெல்லை மாவட்டம் கரிசல்குளத்தை சேர்ந்த மாடசாமி, அவரது மகன் பட்டுராஜா (36) மற்றும் பால்பாண்டி, நாகராஜ், கனகராஜ், ஸ்டாலின், பாலமுருகன் ஆகிய 7 பேர் அழகுதுரை வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அவரை வெளியே அழைத்து வந்து பேசினார்கள்.
அப்போது, அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பட்டுராஜா திடீரென்று அரிவாளால் அழகுதுரையை வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 7 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அழகுதுரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அழகுதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், கயத்தாறு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தர்மர், சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிலிங்கம், அந்தோணி திலீப், மாரியப்பன், முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 7 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
கயத்தாறு அருகே பூ வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-----------