பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு: சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு-மல்லிகை கிலோ ரூ.2,400-க்கு விற்பனை

பனிப்பொழிவால் பூக்கள் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது.

Update: 2022-12-03 19:00 GMT

விளைச்சல் பாதிப்பு

சேலம் பழைய பஸ்நிலையம் அருகே வ.உ.சி பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை, சாதிமல்லி, சம்மங்கி உள்பட பலவகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக நிலவும் கடும் பனிப்பொழிவால் பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மார்க்கெட்டிற்கு 2 டன் அளவு பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் தற்போது 1 டன் அளவில் மட்டுமே பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இதனால் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

பூக்கள் விலை உயர்வு

சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டிற்கு மல்லிகை பூக்கள் வரத்து வெகுவாக குறைந்ததால் அதன் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மல்லிகை ஒரு கிலோ ரூ.1,600 முதல் ரூ.2 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், பனிப்பொழிவால் விளைச்சல் பாதிப்பு, கார்த்திகை மாத கடைசி முகூர்த்தம், கார்த்திகை தீபத்திருவிழா போன்றவைகளால் நேற்று பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக மல்லிகை கிலோ நேற்று ரூ.2 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூக்கள் வரத்து குறைவாக இருந்ததால் அதனை சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

நேற்று முன்தினம் ரூ.1,200-க்கு விற்ற முல்லைப்பூ நேற்று ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ரூ.600-க்கு விற்பனை செய்த சாதிமல்லி ரூ.800-ம், காக்காட்டான் ரூ.800-க்கும் விற்பனையானது. அரளி ரூ.260-ம், செவ்வரளி ரூ.300-ம், சம்மங்கி ரூ.100-ம், நந்தியாவட்டம் ரூ.400-ம், வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ரூ.260-ம் விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்