மார்க்கெட்டில் களை கட்டிய பூக்கள் விற்பனை

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் நேற்று திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களை கட்டியது.

Update: 2023-08-28 13:20 GMT

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் நேற்று திருப்பூரில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களை கட்டியது.

ஓணம் கொண்டாட்டம்

கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. வழக்கமாக திருப்பூரில் வசிக்கும் கேரள மக்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஓணம் பண்டிகையை யொட்டி வீடுகளின் முன்பு செவ்வந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, வாடாமல்லி உள்பட பல்வேறு வகை வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். இதேபோல் பள்ளி, கல்லூரிகள், கேரள அமைப்புகள், தனியார் அமைப்புகள் சார்பிலும் அத்தப்பூ கோலமிடப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விற்பனை அதிகமாக இருந்தது. குறிப்பாக மார்க்கெட்டிற்கு சுமார் 3 டன் செவ்வந்தி பூ விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

விலை குறைவு

வழக்கமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகமாக இருக்கும் நிலையில் நேற்று திருப்பூரில் பூக்களின் விலை குறைவாகவே இருந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முல்லை ரூ.160, ஜாதிமல்லி ரூ.320, அரளிப்பூ ரூ.120, சம்பங்கி ரூ.120, செவ்வந்தி ரூ.160, செண்டுமல்லி ரூ.60 முதல் ரூ.80, பட்டுப்பூ ரூ.70, கனகாம்பரம் ரூ.320, வாடாமல்லி ரூ.80 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.

பூக்களின் விலை குறைவாக இருந்ததால் பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் பூக்களை வாங்கி சென்றனர். இருந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடும் போது ஓணம் பண்டிகைக்கான பூ விற்பனை சற்று குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்