சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று தொடக்கம்

இந்த மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-10 05:43 GMT

சென்னை,

சென்னையில் 3வது முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் இன்று முதல் மலர் கண்காட்சி தொடங்குகிறது. குளிர் பிரதேசங்களில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை சென்னையில் நடத்தினால் எப்படி இருக்கும் என்ற சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து மலர்கள் எடுத்து வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் அன்னப்பறவை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மலர்கள் அலங்கரிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மலர் கண்காட்சியின் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.150, குழந்தைகளுக்கு ரூ.75 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலர்கள் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும் 12 லட்சம் மலர் செடிகள் செம்மொழிப் பூங்கா முழுவதும் வைத்து அலங்கரிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மலர் கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த ஆண்டும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்