கள்ளக்காதலி- மனைவி ரோட்டில் குடுமிபிடி சண்டை: சென்னை போலீஸ் ஏட்டு மீது பாயும் நடவடிக்கை
மனம் உடைந்த சரஸ்வதி, சம்பவத்தன்று அமிர்தவள்ளி வீட்டில் கணவர் இருப்பது தெரியவந்ததால் கணவனை தேடி அங்கு சென்றுள்ளார்;
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தாரமங்கலம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் அமிர்தவள்ளி என்பவருக்கும், சம்பத்குமாருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
கணவனை இழந்த அமிர்தவள்ளி ஒரு மகனுடன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பத்குமார் அமிர்தவள்ளியுடன் இருந்து கொண்டு மனைவி குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த சரஸ்வதி, சம்பவத்தன்று அமிர்தவள்ளி வீட்டில் கணவர் இருப்பது தெரியவந்ததால் கணவனை தேடி அங்கு சென்றுள்ளார். மனைவியை பார்த்தவுடன் அங்கிருந்து போலீஸ் ஏட்டு சம்பத்குமார் வெளியே ஓடியுள்ளார்.
பின்னர் வீட்டிற்குள் புகுந்த சரஸ்வதியை அமிர்தவள்ளி தாக்கியுள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் முடியை பிடித்து ரோட்டில் சண்டைபோட்டு உள்ளனர். பதிலுக்கு அவரும் தாக்கியதால் இருவரும் காயம் அடைந்து ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஏட்டு சம்பத்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ஏட்டு சம்பத்குமார் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.