சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்லும் விமானம் திடீர் ரத்து

சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்லும் விமானத்தை ஓடுபாதைக்கு தள்ளிச்செல்லும்போது வாகனத்தின் கம்பி உடைந்து சக்கரத்தில் சிக்கியதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.;

Update:2023-02-02 04:04 IST

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து 138 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 144 பேருடன் டெல்லிக்கு நேற்று மாலை நடைமேடை 21-ல் இருந்து விமானம் புறப்பட தயாரானது.

அந்த விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு கொண்டு செல்ல 'புஷ் பேக்' செய்யும் இழுவை தள்ளு வாகனம் மூலமாக தள்ளி செல்லப்பட்டது. அப்போது திடீரென இழுவை தள்ளு வாகனத்தில் இருந்த கம்பி உடைந்தது. மீதம் உள்ள கம்பி விமான சக்கரத்துக்கு அடி பகுதியில் சிக்கிக்கொண்டது. உடைந்த அந்த பாதி கம்பியை எடுக்க வேண்டும்.

விமானம் ரத்து

உடனடியாக என்ஜினீயர்கள் குழு வந்து விமானத்தை ஆய்வு செய்தனர். அதில் விமான சக்கரத்துக்கு அடியில் சிக்கிய இழுவை தள்ளு வாகனத்தின் கம்பியை அவசரப்பட்டு எடுக்க முடியாது. இதனால் விமானத்தில் தேசம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

இது பற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டெல்லி செல்ல வேண்டிய விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு உத் தரவு

இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். அதில் அவசரமாக செல்ல வேண்டிய பயணிகளுக்கு மாற்று விமானங்களில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற பயணிகள் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள விமான போக்குவரத்து ஆணையகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்