சென்னை விமான நிலையத்தில் தொழில் அதிபரின் கைப்பையில் 5 துப்பாக்கி குண்டுகள் சிக்கின
திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தொழில் அதிபரின் கைப்பையில் இருந்து 5 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் விமானத்தில் செல்ல வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்குமார் (வயது 50) என்பவரது உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் 'ஸ்கேன்' செய்தனர்.
அதில் அவருடைய ஒரு கைப்பையில் அபாயகரமான பொருட்கள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதனால் பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பையை தனியே எடுத்து வைத்து விசாரித்தனர்.
ஆனால் தொழில் அதிபர் ராஜ்குமார், அந்த பையில் அபாயகரமான பொருள் எதுவும் இல்லை என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பையை திறந்து பரிசோதித்தபோது அதில் 5 துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் ராஜ்குமாரின் விமான பயணத்தை ரத்து செய்து அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், தொழில் அதிபரான அவர், தனது பாதுகாப்புக்காக முறைப்படி உரிமம் பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதில் பயன்படுத்துவதற்கான துப்பாக்கி குண்டுகள்தான் அவை என்றும் கூறினார்.
மேலும் துப்பாக்கி குண்டுகளை விமானத்தில் அனுமதி இன்றி எடுத்துச் செல்லக்கூடாது என்பது தனக்கு தெரியும். ஆனால் தவறுதலாக கார் டிரைவர் பையை மாற்றி வைத்துவிட்டார் எனவும் தொழில் அதிபர் ராஜ்குமார் கூறினார்.
இதையடுத்து போலீசார் அவருடைய உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அவரிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.