இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு
கடலூரில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
கடலூர்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த இரண்டாம் நிலை காவலர் உடற்திறன் தேர்வு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் வருகிற 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 876 பேர், இந்த உடற்திறன் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். தேர்வில் பங்கு பெறும் தேர்வர்கள் விண்ணப்ப மனுவில் இணைத்துள்ள அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 2 நகல்கள் கொண்டு வர வேண்டும். மேலும் தமிழ் பயிற்று மொழியில் கற்றதற்கான பி.எஸ்.டி.எம். சான்றிதழ், முன்னாள் படைவீரர்களுக்கான டிஸ்சார்ஜ் சான்றிதழ் மற்றும் தற்போது பணிபுரிபவர்கள் துறை தலைவரிடமிருந்து பெற்ற தடையில்லா சான்று, என்.சி.சி., என்.எஸ்.எஸ். சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
செல்போனுக்கு அனுமதி இல்லை
உடற்திறன் தேர்வானது சான்றிதழ் சரிபார்த்தல், உயரம், மார்பளவு அளத்தல், 1500 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் என்ற நிலையில் நடைபெறும். தேர்வர்கள் மைதானத்திற்கு செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது. உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள், அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.