2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு

வேலூரில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது.

Update: 2023-02-04 14:33 GMT

வேலூரில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது.

உடற்தகுதி தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காலியாக உள்ள 3,552 இடங்களை நிரம்புவதற்கான அறிவிக்கை கடந்தாண்டு வெளியிடப்பட்டது. அதன்படி 2-ம் நிலை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், சிறை காவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.

இதில் தேர்ச்சி பெற்ற வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 1,059 பேருக்கான உடற்தகுதி தேர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி வரை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

அடையாள அட்டை

வேலூரில் நாளை முதல் 11-ந் தேதி வரை 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடக்கிறது. இதில் 8-ந் தேதி வரை முதல்கட்ட உடற்தகுதி தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் நபர்கள் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறும் 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வில் பங்குபெறும் விண்ணப்பதாரர்கள் காலை 6.30 மணிக்கு மைதானத்துக்கு வரவேண்டும்.

அசல்சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிக்கு வருகையின்போது அழைப்பு கடிதம், ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல் ஒன்றையும் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுகளில் அரைக்கால் சட்டை மற்றும் டி-சர்ட் அணிந்து கொண்டு கலந்து கொள்ள விரும்பினால் ஒரேவண்ணம் கொண்டதாகவும் எந்தவித எழுத்துக்களும் இல்லாத உடையாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எந்தவித பயிற்சி மையத்தின் அடையாளமோ அல்லது சின்னமோ கொண்ட உடை அணிந்து வந்தால் தேர்வில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படும். தலைமுடியை சீராக திருத்தம் செய்து வரவேண்டும். முககவசமும் அணிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

=========

Tags:    

மேலும் செய்திகள்