குப்பணன்குளத்தில் மீன்பிடி திருவிழா
வேடசந்தூர் அருகே குப்பணன்குளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.
வேடசந்தூர் அருகே குடப்பம் கிராமத்தில் முனியப்பன் கோவிலுக்கு சொந்தமான குப்பணன் குளம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். பருவமழை பொய்த்து போனதால் கடந்த 6 ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. நடப்பாண்டில் அதிக அளவில் மழை பெய்து குளம் நிரம்பியது. இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், மீன்பிடி திருவிழா குறித்து சுற்று வட்டார கிராமங்களில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி குடப்பம், வெல்லம்பட்டி, கெண்டையனூர், வைரக்கவுண்டனூர், உசிலம்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிகாலை முதலே குப்பணன்குளத்தில் ஒன்று திரண்டனர். முனியப்பன் கோவிலில், ஊர் முக்கியஸ்தர்கள் சாமி தரிசனம் செய்து குளத்துக்கரை மேல் நின்று வெள்ளைக்கொடியை அசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து கரையில் காத்திருந்த மக்கள் தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட உபகரணங்களுடன் குளத்துக்குள் இறங்கினர். பின்னர் போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர். கட்லா, ஜிலேபி, கெண்டை, விரால் மீன்கள் சிக்கின. ஒவ்வொரு மீன்களும் ½ கிலோ முதல் 4 கிலோ வரை இருந்தன. பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களுடன் வீடுகளுக்கு சென்று சமைத்து, இறைவனுக்கு படைத்து சாப்பிட்டனர்.