மீன்பிடி விசைப்படகுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்

வருகிற 17-ந்தேதி கடலூர் மாவட்ட மீன்பிடி விசைப்படகுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று மீனவர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-05-04 20:13 GMT

கடலூர்:

கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு, படகின் உறுதி தன்மை, எந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீள, அகலம் ஆகியவை பதிவு சான்றுடன் சரிபார்க்கப்பட்டு, அதன்அடிப்படையில் மானிய விலையிலான எரியெண்ணெய் மற்றும் இதர மானியத்திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆய்வு

இந்நிலையில் நடப்பு (2023) ஆண்டில் மீன்பிடி விசைப்படகுகளை வெளிமாவட்டங்களில் இருந்து வருகைபுரியும் மீன்வளத்துறை அலுவலர்களால் கடலூர் மாவட்டத்தில் 17.5.2023 அன்று கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வின் போது, கடலூர் மாவட்ட மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப்படகினை தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டப்படி, துறையால் அறிவுறுத்தப்பட்ட பச்சை வர்ணம் பூசப்பட்டு, படகின் பதிவு எண் தெளிவாக எழுதி ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும்.

ஆய்வின்போது படகு பதிவு குறித்த அனைத்து ஆவணங்கள் மற்றும் அதற்கான நகல்கள், தொலைத்தொடர்பு கருவிகள், தீயணைப்பான் கருவி, உயிர் காப்பு மிதவை மற்றும் உயிர்காப்பு கவசம் ஆகியவற்றை ஆய்வுக்குழுவிடம் அவசியம் காண்பிக்க வேண்டும்.

நடவடிக்கை

ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மீன்பிடி விசைப்படகுகளுக்கான மானிய விலையிலான எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், படகு உரிமையாளர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே கடலூர் மாவட்ட, விசைப்படகு உரிமையாளர்கள் அனைவரும் தங்களது பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத படகுகளை வருகிற 17-ந்தேதி அன்று தவறாமல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்