கடலூர் மாவட்டத்தில் நாளை முதல் மீன்பிடிக்க செல்ல அனுமதி

தங்குகடல் விசைப்படகுகளுக்கு மின்பிடிக்கச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-13 17:53 GMT

கடலூர்,

நீண்ட கடல்பரப்பைக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் ஏராளமான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் அங்குள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ந்தேதி முதல், மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீனவர்களுக்கு மீன்வளத்துறையினர் உத்தரவிட்டிருந்தனர்.

இதன் காரணமாக இன்று வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், நாளை முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள தினசரி இழுவை விசைப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடலில் தங்காமல் காலையில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மாலையில் கரைக்கு திரும்பும் படகுகள் நாளை முதல் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடலுக்குச் செல்லும் படகுகள் உயிர்காப்பு உபகரணங்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் சென்று பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே வரும் 16-ந்தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்தப் பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தங்குகடல் விசைப்படகுகளுக்கு மின்பிடிக்கச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்