9 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

9 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

Update: 2022-12-28 20:02 GMT

தஞ்சை மாவட்டத்தில் 9 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

4,500 நாட்டுப்படகுகள்

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைப்பட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4, 500 நாட்டுப்படகுகளும். மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகளும் உள்ளன.

விசைப்படகு மீனவர்களும் திங்கள், புதன், சனி ஆகிய தினங்களிலும், பிற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மீன்பிடிக்க சென்றனர்

இதனால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்கு கடந்த 8 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் தங்களது படகுகளை துறைமுகங்களில் நிறுத்திவைத்திருந்தனர். மேலும் மீன் வியாபாரி, துறைமுகங்களில் கடைவைத்து தொழில் நடத்துபவர்கள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட 20 ஆயிரம் பேர் வேலையிழந்து தவித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று 9 நாட்களுக்கு பிறகு தஞ்சை மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் 20 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்