மீனவர்கள் 17-ந் தேதி கடலுக்கு செல்கின்றனர்

மீனவர்கள் 17-ந் தேதி கடலுக்கு செல்கின்றனர்

Update: 2023-06-12 18:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 3 மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்க நிர்வாகிகள், முக்கிய பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக அரசின் சட்ட விதிகளால் மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் மீனவர்கள் வாழ்வாதார இழப்பை சந்திக்கின்றனர். இது சம்பந்தமாக அனைத்து மாவட்ட மீனவ சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்கப்பட உள்ளது. அரசு மீன்பிடி தடைக்காலம் என்று தொடங்கி 23 ஆண்டுகள் ஆகிறது. அன்று முதல் இன்று வரை மீனவர்கள் இந்த தடைக்காலம் மூலம் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை. மாறாக வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படும் சூழலில் இருந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்த படகுகளில் தற்போது 25 சதவீதம் படகுகள் கூட இல்லை. மீன் இனப்பெருக்கம் என்ற அரசின் தவறான திட்டத்தில் ஒரு பக்கம் படுவலைகளை தடை செய்யாமல் இழு வலையை மட்டும் தடை செய்து இருக்கிறது. இதனால் எப்படி மீன்கள் இனப்பெருக்கம் செய்ய முடியும். இந்த ஒரு தலைப்பட்சமான முடிவை அரசு கைவிட்டு 23 ஆண்டுகளுக்கு முன்பு போல் தடைக்காலம் இல்லாமல் செய்து மீனவர்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு வழிவகை காண அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகுவோம். நாளையுடன் (14-ந் தேதி) மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது. இதனால் மீனவர்கள் 15-ந் தேதி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் நாள் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வார விடுமுறை என்பதால் அன்று அவர்கள் மீன்பிடிக்க செல்ல இயலாது. இதனால் மீனவர்கள் 17-ந் தேதி (சனிக்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் தாஜுதீன், ராமேசுவரம் ஜேசுராஜ், கோட்டைப்பட்டினம் அசன் முஹைதீன், ஜெகதாப்பட்டினம் உத்திராபதி, மல்லிப்பட்டினம் வடுகநாதன், மண்டபம் ஜாகீர் உசேன் ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்