படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் சாவு

படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் சாவு

Update: 2022-09-05 20:03 GMT

அதிராம்பட்டினம்,

கடலில் மீன்பிடிக்க சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

கடலுக்குள் தவறி விழுந்தார்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் காமாட்சி(வயது 57), செல்வா(26),பாக்யராஜ் (38),சூர்யா(28). மீனவர்களான இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் காந்தி நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

கடலில் 5 நாட்டிகல்் மைல் தொலைவில் இவர்கள் சென்று கொண்டிருந்தபோது காமாட்சி என்ற மீனவர் எதிர்பாராதவிதமாக படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்தார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் காமாட்சியை தேடிப்பார்த்தனர்.

பரிதாப சாவு

ஆனால் காமாட்சி டார்ச் லைட்டுடன் கடலில் விழுந்ததால் அவர்களிடம் வேறு டார்ச் லைட் எதுவும் இல்லாமல் இருட்டில் காமாட்சியை தேட முடியவில்லை.

பின்னர் தாங்கள் வைத்திருந்த செல்போன் வெளிச்சத்தின் மூலம் லேசான வெளிச்சத்தில் தேடிப்பார்த்தனர். சுமார் முக்கால் மணி நேரம் தேடிய நிலையில் காமாட்சியை கண்டுபிடித்து அவரை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் காமாட்சியின் மகன் கலையரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன்பிடிக்க சென்றபோது மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மீனவர் காமாட்சிக்கு மழை ராணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்