ராமேசுவரம், பாம்பனில் மீன்கள் விலை குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம்

அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் சீசன் தொடங்கி உள்ளதால் மீனவர்கள் பிடித்து வரும் அனைத்து வகை மீன்களும் விலை குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2022-11-25 16:29 GMT

ராமேசுவரம், 

அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் சீசன் தொடங்கி உள்ளதால் மீனவர்கள் பிடித்து வரும் அனைத்து வகை மீன்களும் விலை குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தடை

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி இருந்த புயல் சின்னத்தை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் புயல் சின்னம் ஓய்ந்த நிலையில் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை கிளி, விளை, பாறை, டியூப் கணவாய், திருக்கை, கிளாத்தி உள்ளிட்ட பலவகை மீன்களுடன் கரை திரும்பினார்கள்.

ஏமாற்றம்

ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய மீனவர்களின் வலையில் ஓரளவு மீன்கள் கிடைத்திருந்தும் எதிர்பார்த்த அளவு விலை கிடைக்காததால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து பாம்பன் மீனவர்கள் கூறியதாவது:- கார்த்திகை மாதம் பிறந்து உள்ளதால் பெரும்பாலானோர் விரதம் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிய தொடங்கிவிட்டனர். இதனால் ஒரு வாரமாக அனைத்து வகை மீன்களும் ரூ.50 முதல் ரூ.100 வரை விலை குறைந்துவிட்டது.

கார்த்திகை மாதத்திற்கு முன்பு வரையிலும் சீலா மீன் ஒரு கிலோ ரூ.1000-த்திற்கு விலை போனது. தற்போது ரூ.630-க்கு தான் விலை போகிறது. விளைமீன் ரூ.300 இருந்து ரூ. 230 ஆகவும், பாறை ரூ.400 இருந்து ரூ.320 ஆகவும், டியூப் கணவாய் ரூ.100-ல் இருந்து ரூ.60-ஆகவும், மாவுலா ரூ.400-ல் இருந்து ரூ. 320 என அனைத்து வகை மீன்களும் சராசரியாக ரூ.60-ல் இருந்து ரூ.100 வரையிலும் விலை குறைந்து உள்ளது. இவ்வாறு கூறினர்.

விலை கிடைக்க வாய்ப்பு

மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னர் தான் மீன்களுக்கு மீண்டும் ஓரளவு விலை கிடைக்க வாய்ப்பு இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதேபோல் ராமேசுவரம் பகுதியிலும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் பிடித்துவரும் அனைத்து வகை மீன்களும் சற்று விலை குறைந்து உள்ளதாகவே கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்