பட்டாசு விபத்து - சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்
அரியலூர், ஓசூர் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.;
சென்னை,
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று 2-வது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியலூர், ஓசூர் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதில் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில், தொடர்கதையாகிவிட்ட பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனுபவம் இல்லாத தொழிலாளர்கள் பணியாற்றும்போது பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.