கொரட்டூரில் குடும்பத்தினரை கொன்று விடுவதாக மிரட்டிய என்ஜினீயர் - தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

சென்னை கொரட்டூரில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் குடும்பத்தினரை கொன்றுவிடுவதாக கத்தியை காட்டி மிரட்டிய என்ஜினீயரை தண்ணீரை பீய்ச்சி அடைத்து தீயணைப்பு வீரர்கள் மடக்கி பிடித்தனர்.

Update: 2023-01-06 08:42 GMT

சென்னை கொரட்டூர், கோபாலகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி லட்சுமிபாய். இவர்களுக்கு காமேஷ் கண்ணன் (வயது 33) என்ற மகனும், நிவேதா குமாரி என்ற மகளும் உள்ளனர்.

சாப்ட்வேர் என்ஜினீயரான காமேஷ் கண்ணனுக்கு திருமணம் ஆகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். நிவேதா குமாரி, டாக்டருக்கு படித்து வருகிறார்.

நேற்று மதியம் குணசேகரனுக்கும், அவருடைய மகன் காமேஷ் கண்ணனுக்கும் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த காமேஷ் கண்ணன், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து தனது தந்தை, தாய் மற்றும் தங்கை என அனைவரையும் குத்திக்கொன்றுவிடுவதாக மிரட்டினார்.

இதனால் பயந்துபோன குணசேகரன் ஒரு அறைக்குள்ளும், நிவேதா குமாரி மற்றொரு அறைக்குள்ளும் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். உடனே காமேஷ் கண்ணன், அவர்கள் இருவரையும் அறைக்குள் வைத்து கதவை வெளிப்புறமாக சாவி மூலம் பூட்டினார்.

வீட்டின் அறையில் அவரது தாய் லட்சுமிபாய் மட்டும் இருந்தார். இவர்களது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காமேஷ்கண்ணன் கத்தியுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் பொன்மாரியப்பன், அம்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

போலீசார் வருவதை கண்டதும் காமேஷ்கண்ணன் தனது தாய் லட்சுமிபாய் கழுத்தில் கத்தியை வைத்து, தன்னை பிடிக்க வரக்கூடாது என போலீசாரை மிரட்டியபடி மற்றொரு அறைக்குள் தாயுடன் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டார்.

தீயணைப்பு வீரர்கள் குணசேகரன், நிவேதாகுமாரி ஆகியோர் இருந்த அறை கதவுகளை நவீன கருவி மூலம் உடைத்து இருவரையும் மீட்டனர்.

பின்னர் காமேஷ்கண்ணன் தாயுடன் இருந்த அறை கதவையும் உடைத்தனர். கதவை திறந்ததும் அவரது தாய் வெளியே வந்தார். தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள், காமேஷ்கண்ணன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இதையடுத்து காமேஷ்கண்ணனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரை கொரட்டூர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

காமேஷ்கண்ணன் சற்று மனஅழுத்தத்துடன் காணப்பட்டதாக தெரிகிறது. அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவரது மனநிலை, உடல்நிலை குறித்து டாக்டர்கள் பரிந்துரையை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்