உரிமம் இன்றி பட்டாசு விற்கக்கூடாது
உரிமம் இன்றி பட்டாசு விற்கக்கூடாது என மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார் அறிவுறுத்தினார்.;
தஞ்சாவூர்;
உரிமம் இன்றி பட்டாசு விற்கக்கூடாது என மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமல் கொண்டாடுவது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள், தீயணைப்புத்துறை பணியாளர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-தீயணைப்புத்துறை வகுத்துள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பட்டாசு விற்பனை கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகளை வைத்திருக்க கூடாது. தீ விபத்து ஏற்படாமல் இருக்க கடைகளுக்கு வெளிப்புறம் சுவிட்சு பாக்ஸ் வைக்க வேண்டும். பிளாஸ்டிக் தொட்டியில் 200 லிட்டர் தண்ணீரை நிரப்பி வைத்திருக்க வேண்டும். இருவழிப்பாதை கட்டாயம் இருக்க வேண்டும். புகைப்பிடிக்காதீர்கள் என விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும். உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. தீபாவளி பண்டிகையை அனைவரும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட வேண்டும்.
வாளிகளில் தண்ணீர்
பெரியவர்கள் மேற்பார்வையில் தான் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது வாளிகள் நிறைய தண்ணீரும், மணலும் வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது ஆடையில் தீப்பற்றினால் ஓடக்கூடாது. தரையில் படுத்து புரள வேண்டும். தீப்புண் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை ஊற்றி மெல்லிய துணியால் மூடி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். பட்டாசுகளை பாட்டில் மற்றும் தகர டப்பாவில் வைத்து வெடிக்க செய்யக்கூடாது. அதிகஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. நனைந்த பட்டாசுகளை எரிந்து கொண்டிருக்கும் கேஸ் மற்றும் விறகு அடுப்பின் அருகே வைத்து உலர வைக்க கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டம் நிலைய அலுவலர்கள் கணேசன், செல்வராஜ் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கலந்து கொண்டனர்.