சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் காயம்
சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;
விருதுநகர்,
இந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி முக்கிய பங்காற்றி வருகிறது. குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
அடுத்த மாதம் தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால் தற்போது பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல புதிய பட்டாசுகளை இந்த முறை அறிமுகப்படுத்தும் வகையில் தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தான் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்தது. அங்கு தயாரித்து வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் 3 தொழிலாளர்களை மீட்டனர். இருப்பினும் அவர்கள் படுகாயம் அடைந்து இருந்தனர். விசாரணையில் கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகியோர் வெடிவிபத்தில் படுகாயமடைந்து இருந்தது தெரியவந்தது. இவர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு படுகாயமடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரும் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பட்டாசு வெடிவிபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.