காந்திகிராம பல்கலைக்கழக வளாகத்தில் தீ
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென்று தீப்பிடித்தது.
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து சிறுமலை அடிவாரம் செல்லும் சாலை செல்கிறது. இதன் அருகே காந்திகிராம பல்கலைக்கழக குப்பை கிடங்கு உள்ளது. இந்த பகுதியில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த மரங்கள் கருகின. இதற்கிடையே தீப்பிடித்த பகுதியை பல்கலைக்கழக பதிவாளர் சிவகுமார் நேரில் சென்று பார்வையிட்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து அம்பாத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.