ஏற்றுமதி நிறுவனத்தில் தீ; தேங்காய் நார்கள் எரிந்து சாம்பல்

ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தேங்காய் நார்கள் எரிந்து சாம்பலாயின.

Update: 2022-10-27 20:38 GMT

துவரங்குறிச்சி:

கொழுந்துவிட்டு எரிந்த தீ

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த அதிகாரம் அருகே கார்த்தி என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வளாகப் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் மட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள தேங்காய் மட்டை மற்றும் நாரின் ஒரு பகுதியில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றி எரிந்தது. தேங்காய் மட்டைகள் அனைத்தும் காய்ந்த நிலையில் இருந்ததால், தீ மளமள பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

அணைக்க முடியாத நிலை

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நிறுவனத்தில் இருந்தவர்கள் இதுபற்றி உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி அம்பிகா தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.

2 மணி நேரம் போராட்டம்

இதைத்தொடர்ந்து மணப்பாறை, பொன்னமராவதி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் நான்கு தீயணைப்பு வாகனங்கள், 15-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு, அவற்றின் மூலம் தீயணைக்கும் பணியானது நடைபெற்றது.

அருகில் குடியிருப்புகள் உள்ளதால் தீயை பரவவிடாமல் கட்டுப்படுத்தும் பணியில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தேங்காய் நார்கள் சாம்பல்

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார்கள் எரிந்து சாம்பலானது. இருப்பினும் விரைந்து தீ கட்டுப்படுத்தப்பட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் தப்பியது குறிப்பிடத்தக்கது.

தேங்காய் நார் ஏற்றுமதி நிறுவனத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்