கரும்பு தோட்டத்தில் தீ
முத்தூர் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகள் எரிந்து நாசமானது.
கரும்பு தோட்டம்
முத்தூர் அருகே உள்ள செங்கோடம்பாளையம் ேலாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிரின் ஒரு பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென்று கரும்பு பயிர் முழுவதும் பரவியது.
மேலும் அறுவடை செய்து வைக்கப்பட்டு இருந்த கரும்புகள், சொட்டு நீர் குழாய்கள் மீதும் பரவி எரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து சுக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் அனைவராலும் தீயை முற்றிலும் அணைக்க முடியவில்லை.
எரிந்து நாசம்
இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வே.பிரபாகரன், பி.வேலுச்சாமி (போக்குவரத்து) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனாலும் இந்த தீ விபத்தில் 1 ஏக்கர் பரப்பிலான வெட்டப்பட்ட கரும்புகள், ½ ஏக்கர் பரப்பிலான அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் மற்றும் சொட்டு நீர் பாசன குழாய்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
மேலும் இந்த தீ விபத்தில் எரிந்த கரும்பு பயிர்கள், சொட்டு நீர் குழாய்கள் சேத மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.