காஞ்சீபுரம் மாநகராட்சியில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

காஞ்சீபுரம் மாநகராட்சியில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Update: 2023-09-08 11:41 GMT

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் கால்நடைகளை தேடி பிடித்து பறிமுதல் செய்யும் பணியில் காஞ்சீபுரம் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. கால்நடைகளை பிடிக்க வருவாய்த்துறை, கால்நடை துறை, போலீஸ்துறை, சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு மாநகராட்சி நல அலுவலர் அருள் நம்பி தலைமையில் மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை தேடி பிடித்து கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதன்படி நேற்று காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, தாயார் குளம் ரோடு, பகுதியில் சுற்றித்திரிந்த 11 கால்நடைகளை தேடி பிடித்து லாரியில் ஏற்றினர்.

தாயார் குளம் சாலை பகுதியில் கன்றுக்குட்டியுடன் சுற்றித்திரிந்த பசுமாட்டை பிடிக்க முற்பட்டபோது கன்றுக்குட்டி மட்டும் பிடிபட்டது. பிடிபட்ட கன்று குட்டியை மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்ற முற்பட்டபோது தாய் பசுவானது கன்று குட்டியை சுற்றி சுற்றி, ஓடி வந்து, லாரியில் ஏற்ற விடாமல் தடுத்து கொண்டிருந்தது.

தாய் பசுவை பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடி விட்டு, கன்று குட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் மீண்டும் கன்று குட்டியை ஏற்றிய லாரியை சுற்றி சுற்றி வந்து பாசப்போராட்டம் நடத்தியது. தாய் பசுவின் பாசப்போராட்டத்தை கண்ட மாநகராட்சி கால்நடை பிடிப்பு குழுவினர் கன்று குட்டியை லாரியில் இருந்து இறக்கி விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட கன்றுக்குட்டியை வேகமாக அழைத்துகொண்டு தாய் பசு ஓடிய காட்சி காண்போர் மனதை நெகிழ வைத்தது.

இருப்பினும் கால்நடையை தேடி வந்த 2 உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்