கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-17 08:09 GMT

கோப்புப்படம் 

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த IND-TN-11-MM-110 என்ற பதிவெண் கொண்ட இயந்திர மீன்பிடி படகில் கடந்த 15.6.2024 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மீன்பிடி படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதால், மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களில் இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ஊராட்சி, அன்னை நகரைச் சேர்ந்த ஆரோக்கியம் (வயது 50) த/பெ.ஜெபமாலை, பரக்கத்துல்லா (வயது 45) த/பெ. ஐனிசை மற்றும் கலீல் ரஹ்மான் (வயது 32) த/பெ.சையது முகமது புஹாரி ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்