"தகுதி இல்லாதவர்களுக்கு இலவச பட்டா வழங்கிய அதிகாரிகள் பட்டியலை தாக்கல் செய்யுங்கள்" ஐகோர்ட்டு உத்தரவு

தகுதி இல்லாத நபர்களுக்கு இலவச பட்டா வழங்கிய அதிகாரிகள் பெயர் பட்டியலை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-12 20:39 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த வெற்றிவேல், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2017-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஏராளமான ஆதிதிராவிடர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எஸ்.பி.நத்தம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் 1.09 ஏக்கர் பரப்பளவை மட்டும் ஆதிதிராவிடர்களின் நலன் கருதி, அவர்களுக்கு இலவச வீட்டுமனை தேவைக்காக ஒதுக்கி கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலத்தில் எஸ்.பி. நத்தம் கிராமத்தை சேர்ந்த 65 பேர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் எங்கள் கிராமத்தின் அருகே உள்ள எஸ்.பெருமாள்பட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த பலருக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் அந்த நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.

எனவே தகுதியானவர்களுக்கு மட்டும் இந்த நிலத்தில் பட்டா வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலன் இல்லை. மேலும் அரசாணையின்படி, 1.09 ஏக்கர் நிலத்தில் எஸ்.பி.நத்தம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கு இலவச பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல சந்திவீரன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதிகாரிகள் பட்டியல்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அரசின் இலவச பட்டா தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு பல திட்டங்களை மக்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதிகாரிகள் அதனை தகுதியானவர்களுக்கு வழங்குவதில்லை. இதனால் திட்டங்களின் நோக்கம் வீணாகிறது என கருத்து தெரிவித்தனர்.

பின்னர், தகுதி இல்லாத நபர்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கிய அதிகாரிகளின் பெயர் பட்டியலை இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்