"3 மருத்துவ கல்லூரி பிரேத பரிசோதனை கூடங்களின் கேமரா பதிவை தாக்கல் செய்யுங்கள்"-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி
கோர்ட்டு உத்தரவை பின்பற்றவில்லை என தொடரப்பட்ட வழக்கில் மதுரை, விருதுநகர், சிவகங்கை மருத்துவக்கல்லூரிகளின் பிரேத பரிசோதனை கூடங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவை பின்பற்றவில்லை என தொடரப்பட்ட வழக்கில் மதுரை, விருதுநகர், சிவகங்கை மருத்துவக்கல்லூரிகளின் பிரேத பரிசோதனை கூடங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அவமதிப்பு வழக்கு
மதுரையைச் சேர்ந்த வக்கீல் அருண் சுவாமிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது:-
அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைகள் நடக்கின்றன. தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில்தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய 3 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே தடயவியல் நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.
பெரும்பாலான மருத்துவமனைகளில் டாக்டர்கள் இல்லாமல் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களே பிரேத பரிசோதனை செய்கின்றனர். ஆனால், டாக்டர் முன்னிலையில் நடந்ததாக அறிக்கை அளிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறைகளில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 2008-ம் ஆண்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படி உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தேன்.
உத்தரவுகளை நிறைவேற்றவில்லை
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மருத்துவ விதிகளின்படி, பிரேத பரிசோதனை முடித்தபின், அது தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு மற்றும் துறைத் தலைவருக்கு 24 மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும். பிணவறை மற்றும் பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, அவை எல்லா நேரமும் இயங்க வேண்டும்.
பிரேத பரிசோதனை செய்வதற்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் அறிவியல் அலுவலரை தடயவியல் நிபுணர்குழு மூலமாக நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
கேமரா பதிவை தாக்கல் செய்யுங்கள்
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். ஆனால் மனுதாரரான வக்கீல் அருண் சுவாமிநாதன், இது சம்பந்தமான உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படவில்லை. பழைய நிலையே தொடர்ந்து நீடிக்கிறது, என்றார்.
விசாரணை முடிவில், கடந்த 3 நாட்களில் சிவகங்கை, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.