சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது
சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.
சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.
திருக்கார்த்திகை திருவிழா
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம்(டிசம்பர்) 8-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
இதனை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி இரவு விக்னேஸ்வர பூஜையுடன் திருவிழா தொடங்குகிறது. மறுநாள்(28-ந்் தேதி) காலை கொடியேற்றமும் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பரிவாரங்களுடன் படி இறங்கி உற்சவ மண்டபம் எழுந்தருதல் நிகழ்ச்சியும் இரவு திருவீதி உலாவும் நடக்கிறது.
அதனை தொடர்ந்து 29-ந் தேதி முதல் அடுத்த மாதம்(டிசம்பர்)1-ந் தேதி முடிய காலையில் சுவாமி படிச்சட்டத்திலும், இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 2-ந் தேதி அன்று காலை சுவாமி படிச்சட்டத்திலும் இரவு பஞ்ச மூர்த்திகளுடன் 5 சப்பரத்தில் எழுந்து திருவீதி உலாவும் நடக்கிறது. 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை காலை சுவாமி படிச்சட்டத்திலும், இரவு வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
6-ந் தேதி தேரோட்டம்
6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை)திருக்கார்த்திகை தினத்தன்று காலை திருத்தேர் வடம் பிடித்து திருவீதி புறப்பாடும், இரவு தங்கமயில் மற்றும் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று கார்த்திகை தீபம் ஏற்றி திருவீதியில் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.
மறுநாள் 7-ந் தேதி அன்று சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு அவரோகணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தர உள்ளனர்.
ஏற்பாடுகள்
இதனையொட்டி காவல்துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சி, தீயணைப்புத்துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, மற்றும் தொலைதொடர்புத்துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் செய்வதற்கான முன்னேற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி, கோவில் கண்காணிப்பாளர்கள் சுதா, பழனிவேல் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.