நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே நூலஅள்ளி ஊராட்சி வேடிக்கொட்டாய் கிராமத்தில் உள்ள உக்ர வீர நரசிம்மர் கோவில் கும்பிஷேக விழா நேற்று முன்தினம் கங்கணம் கட்டி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தீர்த்தகுடம், முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உக்ரவீர நரசிம்மர் கோவில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் வேடிக்கொட்டாய், நூலஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது.