கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயற்சி
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கழுத்தை அறுத்து பெண் தற்கொலை முயன்றார்.
பழனியில் தைப்பூச திருவிழா என்பதால், திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதற்கிடையே மாலை 5 மணிக்கு தேனி பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அதை பார்த்த பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
தற்கொலை முயற்சி
விசாரணையில், கழுத்து அறுக்கப்பட்டு கிடந்தவர் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை அடுத்த தும்முசின்னம்பட்டியை சேர்ந்த முருகன் மனைவி மகாலட்சுமி (வயது 43) என்பதும், சிறிய கத்தியால் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்டதும் தெரியவந்தது.
ஆனால் மகாலட்சுமி திண்டுக்கல்லுக்கு எதற்காக வந்தார்? ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.