பெண் வருவாய் ஆய்வாளரை பொதுமக்கள் சிறைபிடிப்பு
நெய்வேலி அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் பெண் வருவாய் ஆய்வாளரை பொதுமக்கள் சிறைவைத்தனர். அவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மீட்டனர்
நெய்வேலி
கருத்துகேட்பு கூட்டம்
நெய்வேலி அருகே உள்ள அம்மேரி ஊராட்சிக்குட்பட்ட தொப்ளிக்குப்பம் பகுதியில் 1-வது சுரங்க விரிவாக்க பணிக்காக என்.எல்.சி. நிர்வாகம் நிலம் கையகப்படுத்த உள்ளது. இதற்காக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ளது. இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக நெய்வேலி நில எடுப்பு அலுவலகத்தில் இருந்து வருவாய் ஆய்வாளர் சந்திரா சம்மன் ஒன்றை எடுத்துக்கொண்டு தொப்ளிகுப்பம் பகுதியில் இருக்கும் அம்மேரி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார்.
சிறைபிடிப்பு
இதை அறிந்த தொப்ளிக்குப்பம் பகுதி மக்கள் அங்கே திரண்டு வந்து அவரை சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது, நிலம் எடுப்பு பற்றி பேசுவதற்கு எங்கள் கிராமத்துக்கு யாரும் வரக்கூடாது என பலமுறை தெரிவித்துள்ளோம். மேலும் இதுபற்றி கிராமத்தின் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை ஒன்றும் வைத்துள்ளோம். ஆனால் அதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்தாமல் எங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்து இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறீர்கள். ஆகையால் நீங்கள் அலுவலகத்தின் உள்ளேயே உட்காருங்கள் என்று வருவாய் ஆய்வாளரை வெளியே விடாமல் சிறைபிடித்தனர்.
அதிகாரிகளுடன் வாக்குவாதம்
இது பற்றி தகவல் அறிந்த நெய்வேலி தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பொதுமக்கள், நீங்கள் கூறியது போல் எங்கள் கிராமத்தை சேர்ந்த குறிப்பிட்ட 20 பேர் எந்த அலுவலகத்துக்கும் வர மாட்டோம். எங்கள் இடத்தை பற்றி பேசுவதற்கு நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்தால் மட்டுமே பேச இருக்கிறோம். மேலும் எங்கள் இடத்தை பதிவாளர் அலுவலகத்தில் விற்க சென்றால் நில எடுப்பு அலுவலகத்தில் தடையில்லா சான்று பெற்று வாருங்கள் அப்போதுதான் உங்கள் இடத்தை விற்க முடியும் என தெரிவிக்கின்றனர். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது என்றனர்.
1 மணி நேர பேச்சுவார்த்தை
இதற்கிடையே வருவாய் ஆய்வாளர் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்து நெய்வேலி நில எடுப்பு தனித்துணை ஆட்சியர் மனோகரன் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளரை அவர் மீட்டார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.