போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் போலீசை, கடித்து குதறிய வெறி நாய்கள் - மாநகராட்சி ஊழியர்களிடம் பிடிபடாமல் தப்பி ஓட்டம்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுற்றி திரியும் வெறிநாய்கள், துப்பாக்கியுடன் காவல் காக்கும் பெண் போலீசாரை கடித்து குதறி விட்டன. இந்த நாய்கள் நாய் பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்களிடம் பிடிபடாமல் தப்பி ஓடி ஒளிந்து கொண்டன.

Update: 2023-09-28 06:23 GMT

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 15-க்கும் மேற்பட்ட நாய்கள் சுதந்திரமாக சுற்றி உலா வருகின்றன. அவற்றுக்கு சோறு போட்டு, அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும், போலீசாரும் வளர்க்கிறார்கள். இந்த நாய்கள் எவ்வித பாதுகாப்பு கெடுபிடிகளும் இல்லாமல், கமிஷனர் அலுவலகத்தின் 8-வது மாடி வரை சென்று வருகின்ற அளவுக்கு செல்லமாக உள்ளன. இந்த நாய்களுக்கு வெண்ணிலா, கருப்பன், தடியன் என்று பெயர் சூட்டி ஊழியர்கள் மகிழ்கின்றனர்.

செல்லமாக வளர்க்கப்படும் இந்த நாய்களில் 2 தற்போது வெறிநாய்களாக மாறி விட்டன. கையில் துப்பாக்கி ஏந்தி காவல் காக்கும் பெண் போலீசாரை இந்த வெறிநாய்கள் கடித்து குதறி விட்டன. கையில் துப்பாக்கி இருந்தும், நாய்களின் கடியை வாங்கிக்கொண்ட 3 பெண் போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த வெறி நாய்களின் ஆட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் உயர் போலீஸ் அதிகாரிக்கு சல்யூட் அடித்து அணிவகுப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவரையும், குறிப்பிட்ட வெறிநாய் கடித்து குதறி விட்டது. இதனால் செல்லமாக வளர்க்கும் நாய்களை பிடித்து செல்லும்படி, மாநகராட்சி நாய் பிடிக்கும் ஊழியர்கள் நேற்று வரவழைக்கப்பட்டனர். நாய் வண்டி கமிஷனர் அலுவலக வளாகத்தில் நுழைந்ததும், அத்தனை நாய்களும் ஓட்டம் பிடித்து ஆங்காங்கே பதுங்கி கொண்டன. குறிப்பாக போலீசாரை கடித்து குதறும் வெறிநாய்கள் இரண்டையும் பிடிக்க ஊழியர்கள் தேடினார்கள். அந்த நாய்களும் பிடிபடாமல் தப்பி ஓடி ஒளிந்து கொண்டன.

ஒரு நாயை கூட பிடிக்காமல் நேற்று ஏமாற்றத்துடன் ஊழியர்கள் திரும்பிச்சென்றனர். நாய் வண்டி கமிஷனர் அலுவலக வளாகத்தை விட்டு, வெளியே சென்ற மறு நிமிடம் பதுங்கிய அத்தனை நாய்களும் பலமாக குரைத்தபடி மீண்டும் வலம் வந்தன. கமிஷனர் அலுவலக வளாகத்தில் சுற்றி திரியும் பெரும்பாலான நாய்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளதாகவும், இதனால் இந்த நாய்கள் கடித்தாலும் ஆபத்து இல்லை என்றும், இருந்தாலும் இந்த நாய்களின் கொட்டம் அடக்க முடியாத அளவுக்கு எல்லை மீறி போய் விட்டதால், அத்தனை நாய்களையும் புளு கிராஸ் அமைப்பிடம் பிடித்து ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக, கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்