ரூ.10 லட்சம் பறித்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்

ரூ.10 லட்சம் பறித்த சம்பவத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மதுரை சரக டி.ஐ.ஜி. பிறப்பித்தார்.

Update: 2023-04-13 20:39 GMT

மதுரை,

மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பதவி வகித்தவர் வசந்தி (வயது 43). இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ரோந்து சென்றபோது, அந்த பகுதியில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் வசந்தி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவான வசந்தி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

கோர்ட்டில் ஜாமீன்

இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. சாட்சிகளை கலைக்கக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவருக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அதன்பேரில் சிறையில் இருந்து, ஜாமீனில் வசந்தி வெளியே வந்தார்.

இந்தநிலையில், பணத்தை வழிப்பறி செய்த வழக்கின் முக்கிய சாட்சியான, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை வசந்தி மற்றும் அவரது தரப்பினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசிலும் சம்பந்தப்பட்ட சாட்சி புகார் அளித்தார்.

அதன்பேரில், கடந்த 31-ந் தேதி ஊமச்சிகுளம் சாலையில் வசந்தி காரில் சென்று கொண்டிருந்தபோது, தனிப்படை போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

நிரந்தர பணிநீக்கம்

இந்தநிலையில், பணம் பறிப்பு வழக்கில் மீண்டும் கைதான பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி, காவல்துறை பணியில் இருந்து நிரந்தர நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி பொன்னி பிறப்பித்தார்.

பணம் பறிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்