மதுரையில் அங்கன்வாடி பெண் பணியாளர் தூக்குப்போட்டு  தற்கொலை- "தனது சாவுக்கு 2 அதிகாரிகள்தான் காரணம்" என கடிதம்

மதுரையில் அங்கன்வாடி பெண் பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு 2 அதிகாரிகள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-09 21:33 GMT


அங்கன்வாடி பணியாளர்

மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 42). கடந்த 2013-ம் ஆண்டு இவரது கணவர் பாலமுருகன் உயிரிழந்தார். இவரது மகன் சூரியநாராயணன் (21). எம்.பி.ஏ. பட்டதாரி. கணவரை இழந்த அம்சவள்ளி கடந்த 2019-ம் ஆண்டில் அங்கன்வாடி மைய பணியாளராக நியமிக்கப்பட்டார். சிம்மக்கல் மைக்கேல் தெரு பகுதியில் உள்ள அங்கன்வாடியில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அம்சவள்ளிக்கும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் அம்சவள்ளி, பணியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார்.

அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அவர் பயன்படுத்திய மடிக்கணினி உள்ளிட்டவற்றை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி எடுத்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் அம்சவள்ளியின் அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அவருடைய மகன் சூரியநாராயணன் கதவை தட்டினார். நீண்ட நேரம் ஆகியும் திறக்காத நிலையில் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து கதவை உடைத்து அறைக்குள் சென்றார். அங்கு அம்சவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடிதம் சிக்கியது

இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அம்சவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அவர் கைப்பட எழுதிய நோட்டை கைப்பற்றினர்.

அதில் "என் மன உளைச்சலுக்கும், நான் எடுத்த முடிவுக்கும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரியும், அவரது உதவியாளரும்தான் காரணம். என் சாவுக்கு அவர்கள் மட்டும்தான் காரணம்" என எழுதியிருந்தார். அந்த நோட்டில், அடுத்த பக்கத்தில் "சூர்யா மன்னிச்சிடு" என்றும் எழுதியுள்ளார். இதற்கிடையில் தனது தாயார் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மகன் சூரிய நாராயணன் போலீசில் புகார் அளித்தார்.

போராட்டம்

இதற்கிடையே தகவல் அறிந்து அங்கன்வாடி மைய பணியாளர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்கொலை செய்துகொண்ட அம்சவள்ளியின் மகனுக்கு அரசு ேவலை வழங்க வேண்டும் எனக்கூறி அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரது உடலை ஒப்படைக்க முயன்ற போது, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை வாங்க முடியாது என்று கூறி அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடலை ஆம்புலன்சில் ஏற்ற முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சமரசத்துக்கு பின்னர் உடலை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்