கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update:2023-07-29 03:19 IST

சென்னை,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு உயர், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்பட 38 சங்கங்கள் உள்ளன.

இந்தக்கூட்டமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதை நிராகரிக்க வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளியை கடந்த 26-ந்தேதி சந்தித்து மனுவாக வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

அந்த வகையில் இந்த 10 அம்ச கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்றும் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர்.

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேட்ரிக் ரெய்மெண்ட், ரவிச்சந்திரன், மாயவன், பெருமாள்சாமி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக பொதுச்செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் பிரபுதாஸ், தலைமை நிலையச்செயலாளர் குலாம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். கோரிக்கைகள் தொடர்பாக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து, அடுத்தக்கட்டமாக கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூடி முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்