10 கோவில்களில் பொதுவிருந்து

Update: 2023-02-03 19:30 GMT

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 கோவில்களில் பொது விருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் -எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொது விருந்து

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 கோவில்களில் பொது விருந்து நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிரசித்தி பெற்ற அதியமான்கோட்டை தட்சண காசி காலபைரவர் கோவில், சென்றாய சாமி மற்றும் சோமேஸ்வரர் கோவில் சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள சமுதாயக் கூடத்தில் பொது விருந்து நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் சாந்தி, வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், செயல் அலுவலர் ஜீவானந்தம், தாசில்தார் ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர் முருகன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குமாரசாமிப்பேட்டை

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, கோவில் செயல் அலுவலர் ராதாமணி, நகராட்சி கவுன்சிலர் பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் சேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர்.

இதேபோன்று இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுன சுவாமி கோவில், சாலை விநாயகர் கோவில், தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவில், பி.அக்ரகாரம் முனியப்ப சாமி கோவில், நெருப்பூர் முத்தரையன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில், மொரப்பூர் சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவில் ஆகிய கோவில்களிலும் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்