தந்தை-மகனுக்கு கத்திக்குத்து
நாங்குநேரி அருகே சொத்து தகராறில் தந்தை-மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அவர்களின் உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே சொத்து தகராறில் தந்தை-மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அவர்களின் உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சொத்து பிரச்சினை
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஏமன்புதுக்குளத்தை சேர்ந்தவர் பொன்னையா நாடார் (வயது 65). விவசாயியான இவரது மகன் சரவண பெருமாள் (46).
அதே பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையா நாடாரின் அண்ணன் மகன் சுடலையாடும் பெருமாள் (50). இவர் கன்னியாகுமரியில் ஓட்டலில் சமையல் மாஸ்டராக உள்ளார். இந்த 2 பேரின் குடும்பத்திற்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.
கத்திக்குத்து
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பொன்னையா நாடார் தனது மகன் சரவண பெருமாளுடன் தெருவில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் அங்கு மதுபோதையில் சுடலையாடும் பெருமாள் வந்தார். அவர் திடீரென்று தனது சித்தப்பா ெபான்னையா நாடாரை அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த சுடலையாடும் பெருமாள் தான் மறைந்து வைத்து இருந்த கத்தியால் பொன்னையா நாடாரை குத்தியதாகவும், இதை தடுக்க வந்த அவரது மகன் சரவண பெருமாளையும் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சுடலையாடும் பெருமாள் தப்பிச் சென்றுவிட்டார்.
வலைவீச்சு
அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த பொன்னையா நாடார், சரவணபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பொன்னையா நாடாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய சுடலையாடும் பெருமாளை வலைவீசி தேடிவருகிறார்கள்.