அப்பா... அம்மா... என்னை விட்டுட்டு போகாதீங்க; நர்சரி பள்ளிகளில் மழலையர்களின் அழுகுரல் சத்தம்
நர்சரி பள்ளிகளில் மழலையர்களின் அழுகுரல் சத்தத்துடன் முதல் நாள் வகுப்புகள் நேற்று தொடங்கின. அப்பா... அம்மா... என்னை விட்டுட்டு போகாதீங்க என பிள்ளைகள் பாசப்போராட்டம் நடத்தியதையும் பார்க்க முடிந்தது.
சென்னை,
2023-24-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் கடந்த 12-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. முதலில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் வகுப்புகள் தொடங்கி இருக்கின்றன.
ஏற்கனவே மழலையர் வகுப்புகள் மற்றும் 1-ம் வகுப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை அரசு, தனியார் பள்ளிகளில் விறு விறுப்பாக நடந்து முடிந்துள்ளன. இன்னும் மாணவர்கள் வந்தாலும் அவர்களை சேர்க்கும் பணியிலும் அந்தந்த பள்ளிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பெற்றோர்-பிள்ளைகளின் பாசப்போராட்டம் நிகழ்ந்தது.
அழுகுரல் சத்தம்
அதிலும் மழலையர் வகுப்புகளில் அடியெடுத்து வைக்கும் பிள்ளைகளோ, பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம்பிடித்ததையும், பெற்றோர் அவர்களை சமாதானம் செய்தும், ஏமாற்றியும் பள்ளிக்கு வரவழைத்து வகுப்பறைகளில் விட்டு சென்றதையும் பார்க்க முடிந்தது. வகுப்பறையில் விட்டு சென்றதும் பிள்ளைகள் பள்ளியில் விடவந்த அப்பா, அம்மாவை பார்த்து விட்டுட்டு போகாதீங்க... கூட்டிட்டு போங்க.. என்று கதறி அழுதார்கள்.
அவ்வாறு கதறி அழுத பிள்ளைகளை பள்ளி ஆசிரியர்கள், ஆயாக்கள் சமாதானப்படுத்தி, "அழாதேடா செல்லம்... சாக்லேட் தரேன்... கதை சொல்லுறேன்..." என்று சொல்லி அவர்களை அரவணைத்து தூக்கி இருக்கையில் அமர வைத்தனர். இருந்தாலும், மழலைச் செல்வங்கள் கண்ணீர் விட்டபடி இருந்ததால், முதல் நாள் வகுப்பறை அழுகுரல் சத்தமாகவே இருந்தது.
சமாதானப்படுத்திய பெற்றோர்
சில பிள்ளைகளின் பெற்றோர் வகுப்பறையில் குழந்தைகளோடு, குழந்தையாக அமர்ந்து, அவர்களின் பிள்ளைகளை சமாதானப்படுத்தினார்கள். சிலர் பள்ளி முடியும் வரை வகுப்பறைக்கு அருகில் இருந்து, பள்ளி நேரம் முடிந்ததும், பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.
இது ஒருபுறம் இருக்க சில மழலைப் பிஞ்சுகள் சிரித்த முகத்துடன், புதுப்பையை தோளில் மாட்டிக் கொண்டு, பிடித்த உணவு திண்பண்டங்களை பெற்றோரிடம் வாங்கித் தரச்சொல்லி அதனை கையில் வைத்திருந்தபடியும் வந்தனர். சில பெற்றோர் அடாவடியாய் அழைத்து வந்து மிரட்டி பிள்ளைகளை வகுப்பறையில் அமர வைத்த சம்பவமும் நடந்தது.
வரவேற்பு
பள்ளிகளை பொறுத்தவரையில், முதல் நாள் வகுப்பறைக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு கொடுத்தனர். கார்ட்டூன் வேடம் அணிந்தும், சாக்லேட் மற்றும் பூ வழங்கியும் வரவேற்றனர். சில தனியார் பள்ளிகளில் அரிசி, நெல்லில் 'அ' எழுத்தை எழுத வைத்தும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்றார்கள்.
அழுகுரல் சத்தத்தோடு இருந்த வகுப்பறையை ஆசிரியர்கள் தங்களுடைய கற்பித்தல் திறமையை கொண்டு ஆனந்தப்படுத்தி, பிள்ளைகளை அவர்கள் வசம் திருப்பினார்கள். இப்படியாக மழலையர் வகுப்பு மற்றும் முதலாம் வகுப்பு அறைகளில் காட்சிகள் அரங்கேறின.