காதல் திருமணம் செய்த வாலிபரை வேனை ஏற்றி கொல்ல முயன்ற மாமனார்: வாலிபரின் தங்கை பலியான பரிதாபம்
காதல் திருமணம் செய்த வாலிபர் மீது அவரது மாமனார் வேனை ஏற்றி கொல்ல முயன்றார். இதில் அந்த வாலிபரின் தங்கை பரிதாபமாக உயிரிழந்தார்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 24). சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த ஆண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகள் மஞ்சுவை (22) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களுடைய காதலை மஞ்சுவின் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை.
சுபாஷின் தங்கை ஹரிணி (15). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சுபாஷ் தனது தங்கை ஹரிணியை பள்ளியில் விடுவதற்காக மோட்டார்சைக்கிளில் அழைத்துச்சென்றார்.
அப்போது எரங்காட்டூர் நெசவாளர் காலனி அருகே சென்றபோது பின்னால் வந்த ஒரு வேன் திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து சுபாசும், ஹரிணியும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த அண்ணன், தங்கை இருவரையும் மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹரிணி கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹரிணி பரிதாபமாக உயிரிழந்தார். சுபாஷிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுபாஷின் பெற்றோர் பவானிசாகர் போலீசில் புகார் அளித்தனர். அதில், விபத்தை ஏற்படுத்திய வேனை ஓட்டிவந்தது சுபாஷின் மாமனார் சந்திரன். அவரும், அவருடைய மனைவி சித்ராவும் எங்களது மகனை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் விபத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இதில் எங்களது மகள் சிக்கி பலியாகிவிட்டாள். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்றனர். ஆனால் அங்கு சந்திரனும், சித்ராவும் இல்லை. அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பவானிசாகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.