திருவட்டார் அருகே காவலாளி சாவில் திடீர் திருப்பம்:கோடாரியால் தாக்கி மாமனார் படுகொலை நாடகமாடிய மருமகன் கைது

திருவட்டார் அருகே காவலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கோடாரியால் தாக்கி மாமனாரை கொன்றதாக மருமகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-06 18:45 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே காவலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கோடாரியால் தாக்கி மாமனாரை கொன்றதாக மருமகன் கைது செய்யப்பட்டார்.

காவலாளி சாவு

திருவட்டார் அருகே உள்ள மணலிக்கரை ஆண்டாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 61).

இவர் வேர்க்கிளம்பி சந்திப்பில் உள்ள ஒரு ஜவுளி கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. கிறிஸ்துதாஸ் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து கிறிஸ்துதாஸ் தனது மூத்த மகள் ஜான்சி வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று காலையில் கிறிஸ்துதாஸ் வீட்டில் வலிப்பு நோய் ஏற்பட்டு தலையில் அடிபட்டு காயத்துடன் கிடந்ததாக அவரது மகள் ஜான்சி, மருமகன் பாக்யராஜ் (40) ஆகியோர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

திடீர் திருப்பம்

அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். பின்னர் கிறிஸ்துதாஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையின் போது தலையில் ஆயுதத்தால் தாக்கியதை போன்று பெரிய காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கிறிஸ்துதாஸின் மருமகன் பாக்கியராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கிறிஸ்துதாஸின் சாவில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

மருமகன் கைது

மருமகன் பாக்கியராஜே, மாமனார் கிறிஸ்துதாசை கோடாரியால் தாக்கி தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் இதுபற்றி அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது சொந்த வீடு அருமநல்லூர் சாஸ்தான் கோவில் தெருவில் உள்ளது. கிறிஸ்துதாஸ் மூத்த மகள் ஜான்சியை 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தேன். தற்போது ஆண்டாம் பாறையில் குடும்பத்துடன் தங்கி வந்தேன்.

எனக்கு 3-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். சீசனின் போது கேரளாவில் தங்கி தேன் பெட்டி வைத்து தேன் சேகரிக்கும் வேலை பார்த்து வந்தேன்.

வாரத்துக்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வருவேன். தேன் சீசன் இல்லாத மற்ற நாட்களில் கட்டிட வேலைக்கு சென்று வந்தேன். எனது மாமனார் கிறிஸ்துதாஸ் உடன் நான் மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினோம். அப்போது எனது மாமனார் கியாஸ் சிலிண்டர் வாங்க ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார்.

ஆத்திரத்தில் கோடாரியால் தாக்கினேன்

அப்போது நான் அவரிடம் பணம் இல்லை என்று தெரிவித்து கிளம்பினேன். வீட்டுக்கு வந்த போது என்னிடம் அவர் பணம் கேட்டதால் நான் ஆத்திரம் அடைந்தேன்.

அப்போது அங்கு கிடந்த கோடாரியை எடுத்து அவருடைய தலையில் தாக்கினேன். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காததால் மீண்டும் அவரை தலையில் தாக்கினேன். பின்னர் அந்த கோடாரியை பக்கத்தில் உள்ள கிணற்றில் வீசினேன். இதை தொடர்ந்து எனது மனைவியிடம் சென்று, உனது தந்தை வலிப்பு நோயால் கீழே விழுந்ததில் காயமடைந்து மயங்கி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடினேன். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

சிறையில் அடைப்பு

பின்னர் பாக்கியராஜ், மாமனாரை கொல்ல பயன்படுத்திய கோடாரியை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக பாக்கியராஜை கிணறை காட்டும்படி தெரிவித்தனர். தொடர்ந்து அவர் கிணறை அடையாளம் காட்டினார். அங்கு தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கோடாரி கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் பாக்கியராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்