வாகனம் மோதி தந்தை-மகள் பலி

கடலூர் அருகே வாகனம் மோதி தந்தை-மகள் உயிரிழந்தனர்.

Update: 2023-08-25 19:17 GMT

கடலூர்முதுநகர், 

டிரைவர்

கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் எஸ்.என். நகரை சேர்ந்தவர் தனசேகர் (வயது 41). இவர் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மகேஸ்வரி. மகள் மதுவினா(6).

மதுவினா தொண்டமாநத்தத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தனசேகர் மற்றும் அவரது மகள் மதுவினா ஆகியோர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே வந்து, கடலூர்-விருத்தாசலம் சாலையை கடக்க முயன்றனர்.

2 பேர் பலி

அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தனசேகர் மற்றும் மதுவினா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

தனது கணவர் மற்றும் மகள் பிணமாக கிடப்பதை பார்த்த மனைவி மகேஸ்வரி கதறி அழுதது காண்போரின் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்