தருமபுரம் ஆதீன மடத்தில் இன்று பட்டின பிரவேசம் நிகழ்ச்சி

தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

Update: 2022-05-22 01:59 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை, மே.22- குருபூஜை விழா மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குரு பூஜைவிழா, ஞானபுரீஸ்வரர் கோவில் பெருவிழா ஆகியவை ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும். இந்த விழாவின் 11-ம் நாள் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும்.இந்த ஆண்டுக்கான விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாளான நேற்று கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா நடந்தது.

இந்த விழாவில் ஏற்கனவே ஆதீனங்களாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்வதற்கு தற்போது பீடத்தில் இருக்கும் ஆதீனம், நாற்காலி பல்லக்கில் அமர்ந்து குருமூர்த்தங்கள் எனப்படும் ஆதீனங்கள் நினைவிடங்களுக்கு சென்று வழிபாடு செய்வது ஆதீன மரபு ஆகும்.

அதன்படி நேற்று தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், ஆதீன மடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஆதீன மடத்தை வந்தடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டின பிரவேசம் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு நடக்கிறது. பட்டின பிரவேசத்திற்காக மடம் மின் விளக்குகளால் வாழைமரம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரவேச நிகழ்ச்சி குறித்து தருமபுரம் ஆதீனம் கூறுகையில்,

பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக நிகழ்ச்சி இதில் அரசியல் கலக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என்று ஆதினம் கூறினார்.

முன்னதாக இந்த பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு ஆதீனங்கள், மடாதிபதிகள் சந்தித்து பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வலியுறுத்தினர் இதை தொடர்ந்து பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்