பழனி அருகே ஓடையை ஆக்கிரமித்து விவசாயம்
பழனி அருகே ஓடையை ஆக்கிரமித்து விவசாயம் நடைபெறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.;
பழனி பகுதியில் பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குளங்கள் ஓடைகள் குப்பைகள் கொட்டும் இடமாகவும், ஆக்கிரமிப்பு பகுதியாகவும் மாறி வருவதால், நீர்பிடிப்பு பகுதி சுருங்கி விவசாயம் பாதிக்கப்படுகிறது. இந்தநிலையில் பாலாறு-பாலசமுத்திரம் சாலையோரம் உள்ள ஓடையை ஆக்கிரமித்து விவசாயம் நடந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது ஓடையின் குறுக்கே மண்ணை கொட்டி பாதை அமைத்தும், தென்னை, தீவனப்புல் விவசாயம் நடந்து வருகிறது. இதனால் மழை காலத்தில் ஓடையில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் செல்கிறது. எனவே நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி அதை தூர்வார வேண்டும் என்று பழனி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.