முக்கொம்பு மேலணையில் விவசாயிகள்- பெண்கள் மனித சங்கிலி போராட்டம்

முக்கொம்பு மேலணையில் விவசாயிகள்- பெண்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2023-10-26 20:31 GMT

ஜீயபுரம்:

மனித சங்கிலி போராட்டம்

காவிரி ஆற்றில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சார்பற்றது) சார்பில் திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முக்கொம்பு நுழைவு பகுதியில் தொடங்கி ஊர்வலமாக காவிரி மேலணை வழியாக சென்றனர். காவிரி பாலத்தின் நுழைவு பகுதி அருகில் சென்றபோது, அங்கிருந்த போலீசாரிடம் அவர்கள் வாத்தலை வரை சென்று வருவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து, காவிரி பாலத்தில் மனித சங்கிலி போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரி ஆற்றுப்பாலத்தில் ஊர்வலமாக, கையில் பதாகைகளை ஏந்தியவாறு சென்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தவாறு நின்றனர்.

அழுத்தம் தர வேண்டும்

இதைத்தொடர்ந்து ம.ப.சின்னதுரை கூறுகையில், தமிழகத்தில் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தையும், அனைத்து விவசாய சங்க கூட்டத்தையும் முதல்-அமைச்சர் கூட்ட வேண்டும். தமிழகம் தழுவிய மிகப்பெரிய அளவிலான ஒரு போராட்டத்தை முன்னெடுத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பெரிய அளவிலான அழுத்தத்தை தருவதற்கு முதல்-அமைச்சர் முன்வர வேண்டும். மேலும் நெய்வேலி, கூடங்குளம் அணுமின் நிலையங்களில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு வலியுறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீராதாரங்களை பாதுகாத்து மழைநீரை சேமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழக அரசு அனைத்து கட்சி தலைவர்களையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழக நீர் ஆதாரத்திற்காக போராட்டம் நடத்தி விவசாயிகள் நலனை பாதுகாத்திட வழிவகை செய்ய வேண்டும், என்றார்.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேரன், தமிழ் தேசிய பேரியக்க நிர்வாகி ராஜா ரகுநாதன், தமிழ்நாடு முத்தரையர் சங்கம் பாலமுருகன், சாலை பயனீட்டாளர் சங்கம், வாழைக்காய் மண்டி வியாபாரிகள் உள்பட பல்வேறு அமைப்பினர், விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்