நாற்றுவிடும் பணிகளை தொடங்க முடியாமல் தவிக்கும் கடைமடை விவசாயிகள்

நாற்றுவிடும் பணிகளை தொடங்க முடியாமல் தவிக்கும் கடைமடை விவசாயிகள்;

Update:2022-08-20 01:30 IST

சேதுபாவாசத்திரம

சேதுபாவாசத்திரத்தில் தரிசாக கிடக்கும் சாகுபடி நிலங்களால் நாற்றுவிடும் பணிகளை தொடங்க முடியாமல் கடைமடை விவசாயிகள் தவித்து வருகின்றனர். முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருபோகம் சம்பா சாகுபடி

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒருபோகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கடந்த 2 ஆண்டுகளாக தான் ஒருபோக சம்பா சாகுபடி கைகூடியது. இதற்கு காரணம் மேட்டூர் அணை தண்ணீர் போதுமான அளவு கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத பருவமழையால் சாகுபடி முழுமையடைந்தது.

இந்த ஆண்டு தான் மேட்டூர் அணை மே மாதம் இறுதியில் திறக்கப்பட்டு கல்லணை டெல்டா பாசன சாகுபடிக்காக திறக்கப்பட்டது. இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கக்கூடிய ஆடிப்பட்டம் கைகூடும் என்ற மகிழ்ச்சியில் இருந்த கடைமடை விவசாயிகளின் கனவு கானல்நீராகி போனது. 100 அடியில் இருந்து திறக்கப்பட்ட மேட்டூர் அணை கிடு, கிடுவென உயர்ந்து 120 அடியை எட்டியது. இந்தநிலையில் உபரி நீர் 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு கடலில் கலந்தது. அப்போது கூட சேதுபாவாசத்திரம் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 5 நாட்கள் வீதம் முறைவைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

தரிசாக கிடக்கும் சாகுபடி நிலங்கள்

இதனால் ஆடிப்பட்டம் கைவிட்டு போன நிலையில், சேதுபாவாசத்திரத்தில் சாகுபடி நிலங்கள் தரிசாக கிடக்கின்றன.

இதனால் நாற்றுவிடும் பணிகளை கடைமடை விவசாயிகள் தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர். 5 நாட்கள் தண்ணீர் வரும் என எதிர்பார்த்து நாற்றுவிட்டால் நாற்றுவிட்டு மூன்றாவது நாள் தண்ணீர் பாய்ச்சி கழிவு நீர் விடமுடியாமல் போய்விடும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

நாற்றங்கால்களை காப்பாற்ற அருகில் ஆழ்குழாய் கிணறு இருந்தால் மட்டுமே நாற்றங்காலை காப்பாற்றமுடியும் என்ற நிலை உள்ளது. எனவே முறைவைக்காமல் 30 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்