குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் இருந்து கலெக்டர் சென்றதால், விவசாயிகள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் இருந்து கலெக்டர் சென்றதால், விவசாயிகள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தனர்.
விவசாயிகள் பேசுகையில் பால்நாங்குப்பம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும், பூந்தோட்டத்திற்கு இலவச மின்சார இணைப்பு வழங்க வேண்டும். பயிர்க் கடன்களை அடைத்த பிறகும் நகைகளை திருப்பித்தர 6 மாத காலம் அவகாசம் கேட்கின்றனர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படும்
கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற தடையில்லா சான்றுபெற அலைகழிக்கின்றனர். நிலத்தை சமன்படுத்த முற்பட்டால் அதிகாரிகள் வந்து பணியை தொடர விடாமல் தடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து பணம் கேட்கின்றனர். எங்கள் நிலத்தை சமன்படுத்த முடியவில்லை. சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா பதிலளித்து பேசினார். அப்போது மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்திற்குள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற தடையில்லா சான்று அவசியமில்லை. சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட குறைபாடுகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை மட்டும் பேசினால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
விவசாயிகள் வெளிநடப்பு
அப்போது மாவட்ட கலெக்டருக்கு போன் வந்ததை தொடர்ந்து அவர் கூட்டத்தில் இருந்து வெளியே வந்து அலுவலகத்திற்கு சென்று விட்டார். ஆனால் தொடர்ந்து கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர் பின்னர் கூட்டத்திற்கு வரவில்லை. இதனால் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் திடீரென கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கலெக்டர் விவசாயிகளின் குறைகளை கேட்பது கிடையாது, கடந்த மாதம் கூட்டத்திற்கு வரவில்லை. இந்த கூட்டத்திற்கு வந்தவர் பாதியில் சென்று விட்டார் எனக் கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் கூட்டத்திற்கு செல்லவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் அமர்குஷ்வாஹா மீண்டும் கூட்டத்திற்கு வந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த திடீர் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர் பச்சையப்பன், தோட்டக்கலை துணை இயக்குநர் பாத்திமா மற்றும் விவசாய சங்க பிரதிநிகள் கலந்து கொண்டனர்.